புதிய பகுதிகளோடு 10ம் ஆண்டில் 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்'
புதிய பகுதிகளோடு 10ம் ஆண்டில் 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்'
ADDED : ஜூன் 03, 2026 02:14 AM

சென்னை: நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே, உங்களுடைய அபிமான மாணவர் பதிப்பான, 'தினமலர் - பட்டம்' தன் பயணத்தைத் துவங்குகிறது. 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழில், இம்முறை பல புதிய பகுதிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் அறிவு தேவைக்கேற்ப, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு, கோடிங், எதிர்காலவியல் ஆகிய பகுதிகள் இந்த கல்வியாண்டிலும் தொடர்கின்றன.
வெல்லும் படை
அதோடு, யு.பி.ஐ., பரிவர்த்தனை மற்றும் அதன் தொழில்நுட்பத்தைச் சொல்லும், 'பணமில்லா புரட்சி' மற்றும் சோலார் மின்சார உற்பத்தித் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை விவரிக்கும், 'சூரியனைப் பிடி' மற்றும் நம் ராணுவத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகளை விளக்கும், வெல்லும் படை.
உலகையே கட்டிப் போட்டிருக்கும் 'பார்முலா 1' ரேசிங்கை பற்றி பந்தயப் புறா, மாணவர்களின் தற்கால தகவல் அறிவை மேம்படுத்த அடடே அப்படியா, வங்கித் துறையை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கும் 'காசு கற்க கசடற' உள்ளிட்ட புதிய பகுதிகள் இந்த கல்வியாண்டு முதல், 'தினமலர் -- பட்டம்' இதழில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குநர் காமகோடியும், கணித வல்லுனர் ராஜேஷ் சடகோபனும் இணைந்து வழங்குவது, 'மாற்றி யோசி' என்ற பகுதி; இது, கணி தத்தை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்யும் பக்கம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வாராவாரம் தொடர்ந்து வரும் இந்த பக்கம், மாணவர்கள், ஆசிரியர், பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களது தேவையை மனதில் கொண்டு, இந்த கல்வி ஆண்டும் இந்தப் பக்கம் வெளிவரும்.
பதில்கள்
மேலும், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனுடைய, 'வெங்கியின் பதில்கள்' என்ற அறிவியல் கேள்வி - பதில் பகுதி, கணித பேராசிரியர் இரா. சிவராமனின், 'பை'யன் பதில்கள் பகுதி ஆகியவையும், 'தினமலர் - பட்டம்' இதழில் தொடரும்.
திங்கள் முதல் வெள்ளி வரை, அனைத்து பள்ளி நாட்களிலும் உங்கள் பள்ளிகளுக்கே வந்து சேர்வது, 'தினமலர் - பட்டம்' நாளிதழ்.
முழுவண்ணத்தில் மாணவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கென்றே, 12 பக்கங்களில் டேபுளாய்டு அளவில், பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த இதழை, உங்கள் பள்ளிகளில் வாங்குவதற்கு தொடர்பு கொள்ளுங்கள்: சென்னை : 98843 91342, 99443 09681, 97511 36644.
