வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்; சிறந்த நண்பர் என வர்ணித்த அதிபர் டிரம்ப்!
வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்; சிறந்த நண்பர் என வர்ணித்த அதிபர் டிரம்ப்!
ADDED : அக் 22, 2025 06:22 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, மோடியை 'ஒரு சிறந்த மனிதர்' மற்றும் 'ஒரு சிறந்த நண்பர்' என்று வர்ணித்தார். அவர், வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன் என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குகளை ஏற்றி, தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்கள் மற்றும் பிற சமூக பிரமுகர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். பின்னர் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:
இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று உங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம். அவர் ஒரு சிறந்த மனிதர்.
சிறந்த நண்பர்
அவர் பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சிறந்த நண்பராகிவிட்டார். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். குறிப்பாக, அவருடன் நான் தற்போதைய வர்த்தக பிரச்னைகள் குறித்து விவாதித்தேன். எதிர்காலத்தில் இந்தியா கணிசமான அளவு ரஷ்ய எண்ணெயை வாங்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
எதற்கெடுத்தாலும் வரியா?
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக, மோடி உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அவர்கள் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பினால் பெரிய அளவிலான வரிகளைச் செலுத்துவார்கள், அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை', என டிரம்ப் பதில் அளித்தார்.