UPDATED : டிச 16, 2025 09:56 PM
ADDED : டிச 16, 2025 08:16 PM

புதுச்சேரி: ''விஜயை பார்த்து திமுகவினர் பயப்படுகின்றனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
புதுச்சேரியில் அவர் அளித்த பேட்டி: திமுக அரசு, ஒவ்வொரு முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லா தூண்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்கவில்லை. தீபத்தூணில் மட்டுமே ஏற்ற வேண்டும் என் கேட்கிறோம்.நிச்சயமாக தமிழக அரசியலில் இது எதிரொலிக்கும். இங்கு, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது. ஹிந்துக்களின் உணர்வை காயப்படுத்துவதை தட்டிக் கேட்கிறோம்.
கபட நாடகம்
மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு முதலில் காந்தி பெயர் வைக்கப்படவில்லை. 2008 ல் தான் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கபடநாடகம் போடக்கூடாது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். மஹாத்மா காந்தி மீது பெரிய மரியாதை உள்ள தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். திமுக வாக்குறுதி அளித்தும், வேலைவாய்ப்பு திட்டத்தின் நாட்களை அதிகரிக்கவில்லை. வாக்குறுதி அளிக்காமல் நாங்கள் அதிகரித்துள்ளோம்.
மவுனம் ஏன்
கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்க வேண்டும் என சொன்னது விஜய். அரசியலில் அப்படி இருக்க முடியுமா? விஜய் கம்முன்னு இருங்க. கும்முனு இருங்க. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். இவ்வளவு பிரச்னை நடக்குது பேச மாட்டேன். கம்முனு இருந்தால் மக்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேச வே மாட்டேன் என்றால்அது எந்த மாதிரியான அரசியல். புதுச்சேரிக்கு வந்த விஜய், அன்றைக்கு சிறுபான்மையினர் என பேசினார். திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை . பெரும்பான்மையினர் துன்பத்தில் இருக்கும்போது ஏன் பேசவில்லை.
இருண்ட உலகத்தில்
திமுகவினருக்கு வேல்-ஐ பார்த்தால் பயம். சிவனை பார்த்தால் பயம். பாஜ, இந்து முன்னணியை பார்த்தால் பயம்.யாரை பார்த்தாலும் பயம். பொட்டு வைத்தாலும் குஙகுமத்தை பார்த்தாலும் பயம்.
அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம். குன்றை பார்த்தால் பயம் . விஜயை பார்த்தால் அவர்களுக்கு பயம். அதனால் அரண்டு போய் கிடக்கிறார்கள். இருண்ட உலகத்தில் வாழ்கிறார்கள். அனைத்தையும் பார்த்தும் பயப்படுகிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாழ்வியல் முறை
முன்னதாக புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசியதாவது: எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஹிந்து வாழ்வியல் முறை அடிப்படையில் அப்படி தான் வடிவமைக்கப்பட்டது. இதனை யாரும் தோற்றுவிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த வாழ்வியல் முறை உள்ளது. குன்று இருந்தால் அது குமரன் இருக்கும் இடம்.
ஐதீகம்
ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இஸ்லாம், கிறிஸ்து மதம் தோன்றுவதற்கு முன்பு குன்றில் தீபம் ஏற்றுவது என்பது நமது வழக்கம். குன்றில் கீழே யாரும் தீபம் ஏற்றுவார்களா? யாரும் பார்க்க முடியாது. உச்சியில் தீபம் ஏற்றினால் மட்டும் தான் வீட்டில் இருந்தவர்கள் அதை பார்த்த வீட்டில் ஏற்றுவார்கள். அதுதான் ஐதீகம். குன்று உச்சியில் தீபம் ஏற்றும் ஐதீகம் எதற்கு வந்தது என்றால், அங்கு தீபத்தை ஏற்றினால் தான் 10 - 50 கிமீ தொலைவில் இருக்கும் மகளிர், பெண்கள், தாய்மார்களுக்கும் தெரியும். கோவிலில் தீபம் ஏற்றிவிட்டனர். நாமும் நம்முடைய வீட்டில் ஏற்ற வேண்டும். அதன் பிறகு தீபம் ஏற்றுவர் . இதுதான் நடைமுறை ஐதீகம். விஞ்ஞானம். இதில் விவாதத்துக்கு ஒன்றும்இல்லை
உளறல்
தீபம் ஏற்றுவதற்கு தீபத்தூண் வைக்காமல் எதற்கு வைத்துள்ளனர் என திமுக அரசு, அறநிலையத்துறையிடம் கேட்கிறேன். போட்டோ எடுக்கவா வைத்துள்ளனர்.இத்தனை காலமாக அது தீபத்தூண் அல்ல. ஆங்கிலேயர்களின் சர்வே கல் . அதை வைத்து அளந்தனர் என திமுக கூறியது. நேற்று முதல் புதிதாக இன்னொன்றை கிளப்பியுள்ளனர். அது சர்வே கல் இல்லை. சமணர் காலத்தில் இருந்த கல்.
சமணர் காலத்தில் எதற்கு கல் இருந்தது என திமுகவினரிடம் கேட்டால், அதற்கு அவர்கள் ' அந்தக் காலத்தில் படிக்க முடியாது என்பதால், கல் மீது தீபம் ஏற்றி கீழே அமர்ந்து படிப்பார்கள்' என்கின்றனர். அப்படி யாராவது படித்து பார்த்துள்ளோமா?தினமும் ஒரு பொய்யை சொல்லி அவர்களின் வாதத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டுள்ளனர். முட்டாள்தனமான பொய் என்பது உளறல் என்பது அர்த்தம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

