ஆண்டாள் வேடத்தில் தி.மு.க., - எம்.பி., தமிழச்சி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்
ஆண்டாள் வேடத்தில் தி.மு.க., - எம்.பி., தமிழச்சி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்
ADDED : டிச 18, 2025 06:09 AM

சென்னை: 'ஹிந்து தெய்வங்களை கேலி செய்தபோது, அமைதி காத்த தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, இப்போது ஆண்டாள் வேஷம் போடுகிறார்' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிப்போம், சனாதனம் என்பது, கொசு, டெங்கு, மலேரியா போன்றது, என்றெல்லாம் பேசி, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து, 'இன்ஸ்டாகிராமில்' படம் வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க., கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தி பேசியபோது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார்? கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழக பேச்சாளர்கள், ஹிந்து சமய தெய்வங்களை, நம்பிக்கைகளை மட்டும் குறிவைத்து, இழித்து பழித்து, கேலி கிண்டல் செய்து, அவமதித்து பேசியபோது, அமைதி காத்த தமிழச்சி, இன்று ஆண்டாள் வேஷம் போடுவது ஏன்? யாரை ஏமாற்ற இப்படியெல்லாம் வேஷம் தரிக்கிறார்.
விரைவில், முஸ்லிம் பெண்மணி வேடம் அணிந்தும், கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கோலத்திலும், தன்னை அலங்கரித்து, படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு போர்வையில் ஹிந்து தர்மத்தை அழிக்க முயலுவதும் இன்னொரு பக்கம் கடவுள் ஆண்டாள் வேடமிட்டு, தன்னை கடவுளாக காட்டிக் கொள்ள முயலுவதுமாக அவர் போடும் இரட்டை வேடத்தை தமிழர்கள் ரசிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

