குடிநீர் வாரிய அதிகாரிக்கு மிரட்டல்; கமிஷன் வராததால் தி.மு.க., வட்ட செயலர்கள் அடாவடி
குடிநீர் வாரிய அதிகாரிக்கு மிரட்டல்; கமிஷன் வராததால் தி.மு.க., வட்ட செயலர்கள் அடாவடி
UPDATED : நவ 25, 2025 07:48 AM
ADDED : நவ 25, 2025 07:38 AM

சென்னை: கமிஷன் வராதாதால், வீட்டிற்கு புதிதாக குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை வழங்கும் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, தி.மு.க., வட்ட செயலர்கள் இருவர், உதவி பொறியாளரை மிட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகர் மண்டலம், 99வது வார்டில், புரசைவாக்கம், சுந்தரம் லைன் பகுதியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்துள்ளது. இதற்கு, முறையாக அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால், அதேபகுதியை சேர்ந்த தி.மு.க., வட்ட செயலர்கள் ரங்கநாதன், சேகர் இருவரும் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட வார்டின் வாரிய உதவி பொறியாளரை, இருவரும் மொபைல் போனில் பேசி மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக வெளியான ஆடியோ பதிவு:
சுந்தரம் லைனில் ஒரு வீட்டிற்கு புதிதாக குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட வீட்டில் கேட்டால், அதிகாரிடம் பேசி விட்டதாக செல்கின்றனர். எந்த அடிப்படையில் இணைப்பு வழங்குகிறீங்க... உடனடியாக வேலையை நிறுத்த சொல்லுங்க... நீங்கள் ரொம்ப தப்பு பண்ணுறீங்க.. இதெல்லாம் நன்றாக இருக்காது; நீங்கள் புதுசா வந்து இருக்கீங்க... எங்க இரண்டு பேரின் 'லெட்டர் பேடில்' வைத்தால் உங்களுக்கு பனிஷ்மென்ட்தான் வரும்.
முட்டாள்தனமான வேலையை செய்றீங்க... புதுசா வந்த உங்களுக்கு யார் உங்களுக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தாங்க... கவுன்சிலர் சொல்லிட்டா, என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா... மந்திரியை விட்டா உங்களை நோண்டி எடுத்துருவார்.... ஞாபகம் இருக்கட்டும். மெட்ரோ வாட்டர் அதிகாரிகளை அசிங்கப்படுத்தி விடுவோம்.
இவ்வாறு அதில் பேசியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. சில அதிகாரிகள், 'வேண்டாம், எங்களை விட்டுடங்க சார்...' என்றனர். மற்றொரு அதிகாரி கூறுகையில், 'முறையான அனுமதி பெற்றுதான் பணி நடந்துள்ளது. மிரட்டல் வந்ததால் சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டுமல்ல, துறையில் உள்ள பலரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளோம். சம்பந்த வீட்டிற்கு இணைப்பு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.
தி.மு.க.,வினர் ஆபத்தானவர்கள்
புரசைவாக்கத்தில், குடிநீர் வாரிய இணைப்பு பெற்றவர்களிடம் இருந்து லஞ்சம் வராததால், உதவி பொறியாளருக்கு, தி.மு.க., வட்ட செயலர்கள் இருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். அதிலும், 'வேலையை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால், இணைப்பை உடனே துண்டியுங்கள். இல்லாவிட்டால் அமைச்சரை வைத்து நோண்டி விடுவோம்' என்றும், பகிரங்கமாக அச்சுறுத்துவது, தி.மு.க.,வினரின் ஒட்டுமொத்த அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்யாமல், தி.மு.க., அமைச்சர்கள் கோபாலபுர புகழ் பாடி வருகின்றனர். மறுபுறம், தன் கடமையை சரிவர செய்யும் அரசு பணியாளர்களை அச்சுறுத்தி, மக்களின் பணத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்ச, தி.மு.க., உடன்பிறப்புகள் திட்டமிடுகின்றனர். இப்படி ஓரணியில் திரண்டு, தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடிக்கும் தி.மு.க.,வினர், நம் அனைவருக்கும் ஆபத்தானவர்கள். - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்.

