மனைவிக்கு மயக்க மருந்து செலுத்தி கொலை செய்த டாக்டர் கணவர் கைது
மனைவிக்கு மயக்க மருந்து செலுத்தி கொலை செய்த டாக்டர் கணவர் கைது
ADDED : அக் 15, 2025 11:52 PM

பெங்களூரு: உடல்நல பாதிப்பு இருப்பதை மறைத்து, தன்னை திருமணம் செய்த மனைவிக்கு, அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தி கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் என நாடகமாடிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் டாக்டர் மகேந்திர ரெட்டி, 34. இவருக்கும், தோல் மருத்துவர் கிருத்திகா ரெட்டி, 28, என்பவருக்கும், கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது. இருவரும், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர்.
கிருத்திகாவுக்கு அஜீரணம், இரைப்பை மற்றும் நீரிழிவு பிரச்னை இருப்பதை கணவர் மகேந்திராவுக்கு தெரிவிக்கவில்லை. திருமணமான சில நாட்களில், இது குறித்து மகேந்திரா அறிந்தார். இதனால், மனைவி மீது கோபம் அடைந்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கிருத்திகாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தந்தை வீட்டிற்கு சென்றிருந்த கிருத்திகா, மயக்கம் அடைந்தார். அவருக்கு கணவர் மகேந்திர ரெட்டியே, ஐ.வி., மூலம் மருந்து கொடுத்தார்.
முதல் நாள் இந்த மருந்து கொடுத்த போது வலியால் அவதிப்பட்ட கிருத்திகா, கணவருக்கு போன் செய்து, 'ஐ.வி.,யை எடுத்து விடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அதற்கு கணவர், 'அதை எடுக்க வேண்டாம்; இன்னும் ஒரு நாள் மருந்து போட்டால், உடல்நலம் சரியாகிவிடும்' என்று கூறினார். இரண்டு நாட்களாக தொடர்ந்து இதே சிகிச்சையை அளித்துள்ளார்.
கடந்த ஏப்., 23ல் முற்றி லும் சுயநினைவை இழந்த கிருத்திகாவை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருத்திகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கிருத்திகாவின் சகோதரி டாக்டர் நிகிதா ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், இயற்கைக்கு மாறான மரண வழக்காக போலீசார் பதிவு செய்தனர். கணவர் மகேந்திரா, 'மனைவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்' என, அவரது குடும்பத்தினரிடம் கேட்டு கொண்டார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.
ஆயினும், போலீசார் அதற்கு மறுத்து விட்டனர். பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கிருத்திகா உடல் உறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் அறிக்கை கடந்த 13ம் தேதி கிடைத்தது. அதில், 'அதிகமான மயக்க மருந்து செலுத்திய தடயங்கள் உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி, அக்., 14ல் மாரத்தஹள்ளி போலீசில், மகேந்திர ரெட்டி மீது புகார் அளித்தார். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், உடுப்பி மாவட்டம், மணிப்பாலில் இருந்த மகேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், உடல்நல குறைபாடு இருப்பதை மறைத்ததால் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸ் விசாரணையில், மகேந்திர ரெட்டி குடும்பத்தினர் மீது பல கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.