எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது:மா.செ.,க்களுக்கு முதல்வர் எச்சரிக்கை
எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது:மா.செ.,க்களுக்கு முதல்வர் எச்சரிக்கை
ADDED : டிச 08, 2025 09:18 PM

சென்னை : 'தி.மு.க., வெற்றிக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. சி.பி.ஐ., ஈ.டி., ஐ.டி., மற்றும் தேர்தல் கமிஷனை, நமக்கு எதிராக பயன்படுத்துவர்' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற தலைப்பில், தி.மு.க., மாவட்டச் செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது: க்காளர் பட்டியல் திருத்தப் பணியை ரொம்பவும் கஷ்டப்பட்டு செய்து இருந்தாலும், பாதி கிணறு தான் கடந்துள்ளோம். சரி பார்த்தல் பணிகள் நிறைவடைந்து, நம் மக்களின் பெயர்கள் விடுபடாமல், வாக்காளர் பட்டியலில் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும். அதற்காக, அனைவரும் களத்தில் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும், உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழகத்தை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன் தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை; இது தான் உண்மை.
தி.மு.க., அரசின் திட்டங்களின் வாயிலாக, தமிழகம் முழுதும் 1 கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இதில், பயனாளிகளுடன் சேர்த்து, கட்சியினரையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.முந்தைய ஆட்சிக் காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்து சொல்ல வேண்டும்.
நம் சிறப்பான பணிகளை பார்த்து, நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக பயனாளிகள், கட்சியினர், -நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால், 2 கோடியே 50 லட்சம் ஓட்டுகளை தாண்டுவது சாத்தியமே.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், நம் கூட்டணி பெற்றது, 2 கோடியே 9 லட்சம் ஓட்டுகள் தான். இந்த முறை, அதை விட கூடுதலாக ஓட்டுகளை பெறுவது உறுதி.
இந்த புள்ளி விபரங்களை முன்வைத்தும், உங்கள் களப்பணியின் மீது நம்பிக்கை வைத்தும் சொல்கிறேன்; ஆட்சி அமைக்கப்போவது தி.மு.க., தான். நம் வெற்றிக்குரிய சாதகமான சூழ்நிலைகள் இருக்கிறது என்பதாலேயே, நம் எதிரிகள் குறுக்கு வழியில் தி.மு.க.,வை போட்டு பார்க்க முயல்வர். சி.பி.ஐ., - ஈ.டி., - ஐ.டி., மற்றும் தேர்தல் கமிஷன், இவை அனைத்தையும் நம்மை நோக்கி திருப்பி விடுவர். ஏராளமான பொய்கள் பரப்புவர்; போலியான பிம்பங்களை கட்டமைப்பர். ஊடகங்களை பயன்படுத்தி பொய் செய்திகளை உலவ விடுவர். இவற்றை உறுதியுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
தேர்தல் வெற்றிக்காக, ஒவ்வொரு நாளும் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன். அதே அளவிலான உழைப்பை, உங்கள் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.ஒரு ஓட்டுச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம். எனவே, இந்த தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் மிக முக்கியமானது. உங்கள் ஓட்டுச்சாவடியில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பை, உங்களிடமே ஒப்படைக்கிறேன். என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

