பாக்.,கை திணறடிக்கும் பயங்கரவாதிகள்; சமாளிக்க முடியாமல் அண்டப்புளுகு!
பாக்.,கை திணறடிக்கும் பயங்கரவாதிகள்; சமாளிக்க முடியாமல் அண்டப்புளுகு!
ADDED : அக் 11, 2025 11:05 AM

இஸ்லாமாபாத்: தலிபான் ஆட்சி உடனான அதன் உறவுகள் முறியும் நிலையை எட்டி உள்ள நிலையில், ''பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்திற்கான செயல்பாட்டு தளமாக இந்தியா ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறது'' என அந்நாட்டு ராணுவ தளபதி அகமது ஷெரிப் சவுத்ரி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய வான்வழி தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் பழியை வேறு யாராவது மீது சுமத்தி, திசை திருப்பும் முயற்சியில், வழக்கம் போல் பாக் ராணுவம் தனது பாணியை தொடங்கி உள்ளது.
அதனை நிரூபிக்கும் வகையில் தான், பாக் ராணுவ தளபதி அளித்துள்ள பேட்டி:
பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்திற்கான செயல்பாட்டு தளமாக இந்தியா ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குவதே நெ ருக்கடிக்கு காரணம். யாராவது தங்கள் அரசை விட உயர்ந்தது என்று நம்பினால், அத்தகைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்குபவர்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும். வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சரணடைய வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு தங்களிடம் ஆதாரம் இருக்கிறது. பாகிஸ்தான் தனது மக்களையும் எல்லைகளையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போராட்டம் முழு உறுதியுடன் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
படையினர் 7 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துான்வா மாநிலம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில், படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.