ராணுவ தொழில்நுட்பம் குறித்த ஆஸி., திட்டத்துக்கு வரவேற்பு
ராணுவ தொழில்நுட்பம் குறித்த ஆஸி., திட்டத்துக்கு வரவேற்பு
ADDED : அக் 11, 2025 07:30 AM

சிட்னி : ராணுவம் தொடர்பான தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலியா சென்றுள்ளார். சிட்னியில் நடைபெற்ற இந்தியா - - ஆஸ்திரேலியா ராணுவ தொழில் வணிக மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து ராணுவ உறவுகளை மறுவரையறை செய்து, இந்தோ -- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியாவின், ராணுவத் தளவாடங்கள் மற்றும் சேவைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் திட்டம் வரவேற்கத்தக்கது.
இந்தியாவை முதன்மை பங்காளியாக அங்கீகரித்து, தொழில்நுட்ப பகிர்வுக்கு ஒழுங்குமுறை தடைகளை நீக்கியிருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொழில்நுட்ப பகிர்வு மற்றும் ராணுவ தளவாடங்களின் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் உதவும்.
ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில், இந்தியாவில் முதலீடு செய்யவும், கூட்டு ஒப்பந்தங்கள் செய்யவும் ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.