2026 மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தலை ஒழிக்க கெடு; நக்சல் பாதிப்பு குறைந்து விட்டதாக மத்திய அரசு தகவல்
2026 மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தலை ஒழிக்க கெடு; நக்சல் பாதிப்பு குறைந்து விட்டதாக மத்திய அரசு தகவல்
ADDED : அக் 15, 2025 06:04 PM

புதுடில்லி: 'நக்சல்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 18ல் இருந்து வெறும் 11ஆக குறைந்து உள்ளது. 2026ம் ஆண்டு மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்' என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலிலும், இந்த ஆண்டு, நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் வெற்றிகள் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரை நக்சலைட்டுகள் 312 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் 836 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 1,639 பேர் வன்முறைப் பாதையைத் தவிர்த்து, அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், சரண் அடைந்து உள்ளனர். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இப்போது, சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர், சுக்மா மற்றும் நாராயண்பூர் மட்டுமே இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக உள்ளன.நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பாஜ அரசின் உறுதிப்பாட்டை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றத்தில், நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நக்சல் லேசாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 18 லிருந்து வெறும் 11 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.