சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
ADDED : டிச 18, 2025 04:51 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 284 பேர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில், சுக்மா, பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மட்டும் 255 பேர் கொல்லப்பட்டனர். மேலும் கரியாபந்த் மாவட்டத்தில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மறுபுறம், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் நக்சலைட்டுகள் போலீசாரிடம் ஆயுதங்களுடன் சரண் அடையும் நிகழ்வுகளும் நடக்கிறது.

