'ஐந்தாண்டு கால ஆட்சியும் நமக்கு போராட்டம் தான்': ஸ்டாலின்
'ஐந்தாண்டு கால ஆட்சியும் நமக்கு போராட்டம் தான்': ஸ்டாலின்
ADDED : ஜன 01, 2026 04:21 AM

சென்னை: 'தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: உலக மக்கள் அனைவரும், ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக, 2026ம் ஆண்டு நிச்சயமாக அமையும்.
உருமாற்றம்
ஆளுங்கட்சி நிம்மதியாக தன் பணிகளை கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும்தான், அரசியலின் இயல்பு.
தமிழகத்தில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து, சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க., தான், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியும் நமக்கு உரிமைப் போராட்டம் தான். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும், மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டம் பெயர் மாற்றமும் உருமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அத்திட்டத்தையே முடக்குகிற மத்திய அரசை கண்டித்து, களமிறங்கி போராடிக் கொண்டிருப்பது தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தான். தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காமல், வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ., அரசை எதிர்த்து போராடுவதும் தி.மு.க., தான். நிதி உரிமை, வரி உரிமை, சட்ட உரிமை என, அனைத்திற்கும் போராடுவது நாம்தான்.
தகர்ப்போம்
ஒரு கையில் வாளை ஏந்தி, உரிமைப் போர்க்களத்தில் நிற்கிறோம்; மறு கையில் கேடயத்தை ஏந்தி, மக்கள் நலனைப் பாதுகாக்கிறோம். போர்க்களத்தில் வென்றிட வேண்டும். மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தொடர வேண்டும்.
தமிழக மக்கள் படை நமக்கு ஆதரவாக உள்ளது. அதைச் சிதறடிக்க வேண்டும் என எதிரிகளும், உதிரிகளும் வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிந்து, ஜனநாயகப் போர்க் களத்தில் நாம் செயலாற்றிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

