மைசூரில் புலி தாக்கி விவசாயி பலி: பண்டிப்பூர், நாகரஹொளேயில் 'சபாரி'க்கு தடை
மைசூரில் புலி தாக்கி விவசாயி பலி: பண்டிப்பூர், நாகரஹொளேயில் 'சபாரி'க்கு தடை
UPDATED : நவ 08, 2025 12:45 AM
ADDED : நவ 08, 2025 12:08 AM

பெங்களூரு: கர்நாடகாவின் மைசூரில், புலி தாக்கி விவசாயி ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதை தொடர்ந்து, 'அடுத்த உத்தரவு வரும் வரை, பண்டிப்பூர், நாகரஹொளேயில், 'சபாரி' செல்ல தடைவிதித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில், 'சபாரி' எனப்படும், வன சுற்றுலா சேவை நடத்தப்படுகிறது. நாடு முழுதும் பிரபலமான இவ்விரண்டு இடங்களுக்கும் தினமும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். ஜீப்கள், மினி வேன்கள் மூலம் சுற்றுலா பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆலோசனை மைசூரு, சாம்ராஜ் நகரில் மனிதர்களை புலிகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு மாதத்தில், பன்னேகெரே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், குர்னேகல் கிராமத்தை சேர்ந்த தொட்டனிங்கையா ஆகியோர் புலி தாக்கி கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, மனித - விலங்குகள் மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் ஆகியோர், சாம்ராஜ் நகரில், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், 'வனப்பகுதிக்குள் சபாரி நடத்தப்படுவதால், வாகனத்தின் சத்தத்துக்கும், பொது மக்களை கண்டும் அச்சமடையும் விலங்குகள், அங்கிருந்து வெளியேறி கிராமப்பகுதிக்குள் நுழைகின்றன. எனவே, சபாரி யை ரத்து செய்ய வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்த நி லையில், மைசூரு மாவட்டம், சரகுரு தாலுகாவின் ஹேல்ஹெக்குடிலு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சவுடய்யா நாயக், 40, நேற்று காலை தன் வயலை மாடுகள் வைத்து உழுது கொண்டிருந்தார்.
அப்போது உணவு தேடி வந்த புலி ஒன்று, சவுடய்யா நாயக்கை பின்னால் இருந்து தாக்கி, வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த மாடுகள், பீதியுடன் ஓடி, வீட்டை அடைந்தன.
சவுடய்யா இல்லாமல் மாடுகள் மட்டும் வந்ததை பார்த்த குடும்பத்தினரும், கிராமத்தினரும் பீதியடைந்தனர். வயலுக்கு சென்றபோது, சவுடய்யா நாயக்கை காணவில்லை. அவரது உடல், ஒரு பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
புலியால் தின்று வீசப்பட்டிருந்த உடலை பார்த்து, குடும்பத்தினர் கதறி அழுதனர். இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், மூன்று மகள் களும் உள்ளனர்.
கடந்தாண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டு யானை தாக்கியதில், இடுப்பு எலும்பு முறிந்து சவுடய்யா வீட்டில் இருந்தார்.
அதில் இருந்து குணமடைந்த அவர், கடந்த மூன்று மாதங்களாக வயலுக்கு சென்று வந்தார். தற்போது புலி தாக்கி பலியானார்.
தகவல் அறிந்த வனத்துறையினர், புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனவிலங்கு கா ப்பாளருக்கு, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதம் அதில் குறிப்பிட்டு உள்ள தாவது:
விவசாயி சவுடய்யா நாயக், புலி தாக்குதலில் பலியாகி உள்ளார். இச்செய்தி எனக்கு வேதனை அளிக்கிறது. எனவே, பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில், மறு உத்தரவு வரும் வரை சபாரிக்கு தடை விதிக்கப்படு கிறது.
விவசாயியை கொன்ற புலியை பிடிக்க, வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பணியில், சபாரியில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களின் சேவையை பயன் படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

