முறையாக வேலை செய்யாத 'பாஸ்ட்டேக்'; 'டோல்கேட்'களில் வாகனங்கள் காத்து கிடப்பு
முறையாக வேலை செய்யாத 'பாஸ்ட்டேக்'; 'டோல்கேட்'களில் வாகனங்கள் காத்து கிடப்பு
ADDED : செப் 24, 2025 03:30 AM

சென்னை: சுங்கச்சாவடிகளில், 'பாஸ்ட்டேக்' முறையாக வேலை செய்யாததால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசாரின் நேர கட்டுப்பாடு காரணமாக, காலை முதல் மாலை வரை, சரக்கு வாகனங்கள் சென்னைக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் சென்னையில் வலம் வர முடிகிறது. இது போதாதென்று, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தவும் சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அவலம்
சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நேர விரயத்தை குறைப்பதற்கு, மின்னனு முறையில் கட்டணம் செலுத்தும், 'பாஸ்ட்டேக்' நடைமுறை உள்ளது. ஆனால், பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக வேலை செய்வதில்லை.
சென்னை பைப்பாஸ் சாலையில் சூரப்பட்டு, வானகரம்; சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் நல்லுார்; சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் ஸ்ரீபெரும் புதுார்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனுார்; எண்ணுார் விரைவு சாலையில் உள்ள மாத்துார் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த அவலம் தொடர்கிறது.
சரக் கு வாகனங்கள் போக்குவரத்து அதிகமுள்ள மதுரை , கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், பல சுங்கச்சாவடிகளிலும் இதே பிரச்னை உள்ளது.
இதனால், கட்டணம் செலுத்துவதற்கான வழிகள் அமைக்கப்பட்டு, சில வழிகளில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், ஊழியர்கள் கண்ணால் பார்த்து, கணினியில் வாகன பதிவெண்ணை குறித்து அனுப்புகின்றனர். இதனால், 10 முதல் 15 நிமிடம் வரை சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதிருப்தி
கட்டணம் வசூலிப்பில் ஆர்வம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனங்கள், இதை கண்டுகொள்ளாமல் உள்ளன. இது வாகன ஓட்டிகள், பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, சென்னை பைபாஸ் சாலை திட்ட இயக்குனர் ரவீந்தர் ராவ், 'இப்போதுதான் இந்த பிரச்னை என் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.