ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!
ADDED : செப் 23, 2025 09:29 PM

தர்மபுரி: காதல் திருமணத்தில் கர்ப்பமான மைனர் பெண்ணின் பெற்றோர் மீது வழக்கு பதியாமல் இருப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், கடந்த மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியான அவர், மருத்துவ சிகிச்சைக்கு சென்றபோது அவர் மைனர் என்பது தெரியவந்தது. சமூக நலத்துறை அதிகாரிகள், பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரணை செய்த வீரம்மாள், பெண்ணின் பெற்றோரிடம் 18 வயது ஆவதற்கு முன் மகளை திருமணம் செய்து கொடுத்ததற்காக, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் உங்களை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக மிரட்டினார்.
ஆனால் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வழக்கை கைவிட்டு விடுவதாகவும் கூறி உள்ளார். பணம் கொடுக்க விரும்பாத பெண்ணின் பெற்றோர், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி, நாகராஜிக்கு புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெண்ணின் பெற்றோர் கொண்டு சென்று கொடுத்தனர். அவை இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். சிறையில் அடைத்தனர்.