சமையலறை கருவிகளுடன் போராடுங்கள்: பெண்களை அழைக்கும் மம்தா
சமையலறை கருவிகளுடன் போராடுங்கள்: பெண்களை அழைக்கும் மம்தா
ADDED : டிச 11, 2025 06:22 PM

கோல்கட்டா: '' வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் பெண்கள், சமையல் அறை கருவிகளுடன் போராட வேண்டும். மக்கள் யாரும், எல்லையில் எல்லை பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே செல்ல வேண்டாம் '' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கிருஷ்ணா நகரில் நடந்த பேரணியில் மம்தா பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் தாயார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகள் பறித்துவிட முடியுமா? தேர்தலின் போது டில்லியில் இருந்து போலீசாரை அவர்கள் அழைத்து வருவார்கள். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் கருவி இருக்கின்றன. அந்த சமையல் அறையில் உள்ள பொருட்கள் வைத்து போராடுங்கள். உங்களிடம் பலம் இருக்கிறது. உங்கள் பெயர் நீக்கப்பட்டால் அதனை விட்டுவிட வேண்டாம். பெண்கள் முன்னால் இருந்து போராட வேண்டும். ஆண்கள் அவர்களுக்கு பின்னால் நின்று போராடுவார்கள்.
பெண்கள் அல்லது பாஜ இவற்றில் யார் சக்தி வாய்ந்தவர் என பார்க்க வேண்டும். மதவாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. மதசார்பின்மையை நம்புகிறேன். எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போது எல்லாம் பாஜ பணத்தை பயன்படுத்துவதுடன், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்டு வந்து மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்யும்.
நாட்டு விடுதலைக்காக போராடிய வங்க மக்களை, தற்போது குடியுரிமையை நிரூபிக்க சொல்கின்றனர். பாஜ எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என எங்களுக்கு தெரியும். அநீதியை எப்படி தடுப்பது என தெரியும். பாஜவின் ஐடி பிரிவினர் தயாரிக்கும் பட்டியல் அடிப்படையில் தேர்தலை நடத்த பாஜ விரும்புகிறது. பீஹாரில் நீங்கள் விரும்பியதை செய்ய முடியும். மேற்கு வங்கத்தில் முடியாது. மாநில மக்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம். எல்லை பாதுகாப்பு படை முகாம் அருகே யாரும் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

