ADDED : அக் 06, 2025 05:36 AM

மாஸ்கோ: பாகிஸ்தானுக்கு, 'ஜெட்' போர் விமானங்களுக்கான இன்ஜின்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பாதுகாப்பு படையில், சீன தயாரிப்பு போர் விமானமான, 'ஜே.எப். - 17 தண்டர் பிளாக் 3 ஜெட்' விமானங்களுக்கு, ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட ஆர்.டி., - 93 எம்.ஏ., இன்ஜின்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
பாசாங்கு வேலை இத்தகவல்களை ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும், இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, பாகிஸ்தானுடன் ராணுவ ஒத்துழைப்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரும் டிசம்பர் மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் போது இரு நாடுகள் இடையே உயர்மட்ட பேச்சு நடத்தப்பட உள்ளது. வளர்ந்து வரும் இந்தியா - ரஷ்யா இடையேயான நட்புறவை கெடுக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் மோடி, ரஷ்யா - சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் நட்பு பாராட்டியது பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியாவுடன் நட்புறவில் உள்ள நாடுகளிடம் தாமாக முன்வந்து நட்பு வைத்துக்கொள்வது போன்ற பாசாங்கு வேலையை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, சவுதி அரேபியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் சமீபத்தில் செய்து கொண்டது. இதைத் தொடர்ந்து, புடின் இந்தியா வரவுள்ள நிலையில், இந்தியா - ரஷ்யா இடையே காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இப்படி ஒரு தகவலை பாகிஸ்தான் கசியவிட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
காங்., கேள்வி இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
மிக நம்பகமான நட்பு நாடாக இருந்து வரும் ரஷ்யா, இந்தியாவின் வேண்டுகோளை புறக்கணித்து, பாகிஸ்தானின் சீன தயாரிப்பு போர் விமானங்களுக்கு இன்ஜின்களை வழங்க இருப்பதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் நாட்டிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும், 'பி.எல்., - 15' ஏவுகணைகளை இந்த விமானங்களில் பயன்படுத்தியிருக்கலாம் என, இந்திய விமானப்படை தலைவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேரடி தலையீடு இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்.
பாகிஸ்தானை துாதரக ரீதியாக இந்தியாவால் தனிமைப்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக பாகிஸ்தானின் தலைமை மற்றும் அதன் ராணுவ தளபதி அசிம் முனீர் உட்பட, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகவும் அன்பாக பாராட்டுகிறார்.
ரஷ்ய அதிபர் புடின் ஆயுதங்களை வழங்குகிறார். இதேபோல், ஆப்பரேஷன் சிந்துாரின் போது எவ்வித நிபந்தனையுமின்றி பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்தது. இது, இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட தோல்வியையே அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.