நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 392 பேர் பலி: 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயம்
நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 392 பேர் பலி: 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயம்
UPDATED : ஆக 27, 2026 10:34 PM
ADDED : ஆக 27, 2026 12:46 AM

காத்மாண்டு: திபெத்தில் நேற்று பிரமாண்ட பனிப்பாறை உருகி, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வழியில் இருந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் பேரழிவில், 392 பேர் பலியாகினர். 49 தமிழர்கள் உட்பட 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகியுள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து துவங்கும் கோஷி ஆறு, மற்றொரு அண்டை நாடான நேபாளம் வழியாக, நம் நாட்டில் பீஹார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு வருகிறது. மொத்தம், 720 கி.மீ., நீளமுள்ள இந்த ஆறு, பொதுவாக கோஷி என்று
அழைக்கப்படுகிறது. திபெத்தில், போய்கு என்றும், நேபாளத்தில் போடே கோஷி
என்றும், நம் நாட்டில் கண்டக் நதி என்றும் அழைக்கப்படுகிறது.
திபெத்தில் உள்ள ஜாங்க்ஜாக்போவில் பனிப்பாறைகள் உருகி, மிகப்பெரிய ஏரி உருவாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 26,286 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரியில், நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் மிக அதிக அளவில் நீர், கீழ்நோக்கி பாய்ந்து, கோஷி ஆற்றில் சேர்ந்தது. இதனால் திடீரென, கோஷி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் ஓரம் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், 20க்கும் மேற்பட்ட பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை இந்த வெள்ளம் கபளீகரம் செய்தது. திபெத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மற்றும் டாடிங் மாவட்டங்கள் இதனால் கடும் பாதிப்பை சந்தித்தன.
' திபெத்தில் இருந்து பெருவெள்ளம் ஏற்பட்டால் போதிய முன்னெச்சரிக்கை தகவல்கள் கிடைக்காது. நேபாளம், இந்தியா உள்ளிட்ட கீழ்நிலை நாடுகளில் மக்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது' என 2016லேயே மத்திய நீர் ஆணைய தலைவர் கனஷ்யாம் ஜா சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், போடே கோஷி மற்றும் அது இணையும் திரிசூலி நதி கரையோரங்களில் உள்ளவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, நேபாள அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளப் பெருக்கில் சிக்கி, திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 157 பேரும் என மொத்தம், 392 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகி உள்ளனர். இதில் தமிழகத்தில் சுற்றுலா சென்ற 57 பேரும் அடக்கம்.
நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, 15க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை நேபாள ராணுவம் பயன்படுத்தியுள்ளது. இதன் பலனாக, 3-0க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில், 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது.
அவசரகால மீட்பு நடவடிக்கைகள் குறித்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் உத்தரவிட்டுள்ளார்.
நேபாள வெள்ளத்தைத் தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டியுள்ள பீஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பீஹாரில் கோஷி, கங்கை மற்றும் கண்டக் நதி படுகைகள் அமைந்துள்ள ஆறு மாவட்டங்களில் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமையை உடனுக்குடன் கண்காணிக்கவும், மாநிலத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதேபோன்று உத்தர பிரதேசத்தில் கண்டக் மற்றும் நாராயணி நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், மகாராஜ் கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்ட நிர்வாகங்களை முழு எச்சரிக்கையுடன் இருக்க, பா.ஜ.,வைச் சேரந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிக்கை: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, திபெத்தின் கியிரோங் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், ஈஷா யோகா மையத்தின், கைலாஷ் யாத்திரை குழுக்களில் ஒன்று சிக்கிக் கொண்டது. அவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தில் இருந்தபோது வெள்ளம் ஏற்பட்டது. அந்த அலுவலக கட்டடமும், நகரின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிகிறது. இதனால், நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.
மீட்புப் பணிகளில் உதவ, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். குடியேற்றத் துறை அலுவலகத்தில் இருந்தவர்களின் நிலை என்ன, அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும், இதுவரை கிடைக்கவில்லை. அந்த இடத்திற்கு செல்ல, அதிகாரிகளுடன் இணைந்து முயற்சித்து வருகிறோம். எத்தகைய ஆபத்து இருந்தாலும், மீட்புப் பணிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்.
எங்கள் யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக திரும்பி விட்டனர். தற்போது 743 பேர் திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் உள்ளனர். 77 பேர் குடியேற்றத் துறை மையத்திலும், மூன்று தன்னார்வலர்கள் நேபாளத்தின் டிமுரே பகுதியிலும் இருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில், நானும் பங்கேற்கிறேன். தற்போதைய சூழலில் சிறந்த உதவிகளை உறுதி செய்ய, நான் அப்பகுதிக்கு நேரில் சென்றுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
