ADDED : ஜன 21, 2026 07:01 AM

திருச்சி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்., அணியின் முக்கிய நிர்வாகியுமான, தஞ்சையைச் சேர்ந்த வைத்தி லிங்கம், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைகிறார்.
தஞ்சையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின், அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் . உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த வைத்திலிங்கம், தற்போது மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ளார்.
இதற்கிடையில், கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சரியான முடிவெடுக்கவில்லை என பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் இருந்த வைத்திலிங்கத்துக்கு, தி.மு.க., மற்றும் த.வெ.க.,வில் இருந்து தொடர் அழைப்புகள் சென்றன.
இறுதியில் தி.மு.க.,வுக்கு செல்வது என முடிவெடுத்து, ஆதரவாளர்களுடன், இன்று காலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார். பன்னீர்செல்வத்தின் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் உள்ள சில நிர்வாகிகளையும் தி.மு.க., பக்கம் அழைத்துச் செல்ல, வைத்திலிங்கம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி, கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் வைத்திலிங்கத்துடன், தி.மு.க.,வில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

