முன்னாள் துணை வேந்தர் மீது ரூ.2.50 கோடி மோசடி வழக்கு
முன்னாள் துணை வேந்தர் மீது ரூ.2.50 கோடி மோசடி வழக்கு
ADDED : நவ 17, 2025 06:46 AM

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2001ல், சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்தவர் கலாநிதி.
இவர், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரைச் சேர்ந்த தனசேகரனிடம், அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 2.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கலாநிதி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனசேகரன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார், கலாநிதி, ராஜலட்சுமி ஆகியோர் மீது, இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

