ADDED : நவ 17, 2025 01:29 AM
சென்னை: 'தமிழகத்தில் அசுத்தமான நீர் உள்ள குளங்களில், பொது மக்கள் குளிக்கக்கூடாது' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில், மூளையை தின்னும் அமீபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அசுத்தமான நீரில் குளிப்பதால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
அசுத்தமான குளங்களில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் குளிக்க, அனுமதி வழங்கக்கூடாது. குளங்கள் துாய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்களில், தண்ணீரில் குளோரின் அளவு சரியாக கலக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், வாந்தி, மயக்கத்துடன், மூளை அழற்சி பாதிப்புடன், மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன.

