/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலிப்பு உள்ளவர்கள் இயல்பாக வாழலாம்
/
வலிப்பு உள்ளவர்கள் இயல்பாக வாழலாம்
ADDED : நவ 17, 2025 01:29 AM

ஆண்டுதோறும் நவ. 17ல் தேசிய வலிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருப்பூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் வளவன் நம்முடன் பகிர்ந்தவை:
நமது மூளையில் உள்ள நியூரான்களில் திடீரென அசாதாரண மின் மாற்றம் ஏற்படும்போது வலிப்பு வருகிறது. சிலருக்கு கண்களில் பூச்சி பறக்கும் படியான உணர்வு, வயிற்றில் படபடவென அடிப்பது போன்ற உணர்வு, தலைசுற்றல் போல தோன்றும். ஒரு சில வலிப்புகள் எவ்வித அறிகுறி இல்லாமலும் வரும்.
பொதுவாக இரண்டு வகையில் வலிப்பு வரும்: 'போக்கல்' மற்றும் 'ஜெனரல்'. மூளையில் உள்ள இரு பகுதிகளில் ஒன்றில் மட்டும் வருவது போக்கல். இதில் சுயநினைவு இருக்கும்; வலிப்பு வருவது முன்பே தெரியும். மூளையின் இரு பகுதியிலும் வருவது 'ஜெனரல்'; அறிகுறிகள் தெரியாது; சுயநினைவு இருக்காது. Absence seizure எனப்படும் குறுகிய கால வலிப்பு, குழந்தைகளுக்கு வரக்கூடியது. குறிப்பிட்ட வயதுக்குமேல் சரியாகிவிடும்.
வலிப்பைப் பொறுத்தவரை, இவர்களுக்கு வரும், வராது என்று கூற முடியாது, எவருக்கும் எப்போதும் வரலாம். வலிப்பு வந்த பிறகு வேண்டுமானால் சி.டி., எம்.ஆர்.ஐ., ஈ.ஈ.ஜி., போன்ற டெஸ்ட்கள் எடுத்து வலிப்பின் தாக்கத்தை கண்டறியலாம். தலையில் அடிபட்டு தழும்பு ஏற்பட்டால் சிலருக்கு வலிப்பு வர வாய்ப்பு இருக்கிறது. அதிக குடிப்பழக்கம், திடீரென நிறுத்துவது வலிப்பை ஏற்படுத்தும். குடிப்பழக்கத்தை மெல்ல நிறுத்துவது நல்லது. சர்க்கரை, உப்புச்சத்து அளவு கூடுவதும், குறைவதும் காரணியாகும்.
மருத்துவம்
சில வலிப்புகள் மருந்து, மாத்திரையில் சரியாகும். சர்க்கரை, சோடியம், உப்புச்சத்து போன்றவற்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வரக்கூடிய வலிப்புகள் குறிப்பிட்ட நோய் சரியாகும்போது குணமடையும். பரம்பரை வழியாகவும், தலையில் அடிபட்டு நிரந்தர தழும்புகள் வாயிலாக வரக்கூடியது மருந்து தான் தீர்வாகும். இறுதியாக அறுவை சிகிச்சையும் வந்துவிட்டது.
தாரக மந்திரம்
உணவு, உறக்கம் ஆகிய இரண்டு தாரக மந்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உறக்கத்தில் எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது. தினமும் ஒரே நேரத்தில் உறங்கி, எழ வேண்டும். அதுபோல சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இது சாப்பிடலாம்; சாப்பிடக்கூடாது என்றில்லை. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். உணவும் உறக்கமும் சரியாக இருந்தால் வலிப்பு வரும் வாய்ப்பு வெகுவாக குறையும். ஏற்கனவே மருந்து எடுத்துக்கொள்பவர்கள், எக்காரணம் கொண்டும் அவற்றை நிறுத்தக் கூடாது. வலிப்பு உள்ளவர்கள், மருத்துவர் அனுமதியின்றி எக்காரணம் கொண்டும் வாகனம் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை செய்யக் கூடாது. இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது.
குணப்படுத்தலாம்
வலிப்பு வந்தவுடன் கைகளில் சாவி, இரும்பு கொடுக்கும் வழக்கம் சிலரிடம் இன்னும் இருக்கிறது. இது கூடாது. விழிப்புணர்வு மேம்பட வேண்டும். சரியான உணவு, உறக்கம் மற்றும் மருத்துவரின் அறிவுரையால் வலிப்பை எவரும் எதிர்கொள்ளலாம், இயல்பாக வாழலாம். அதனை பார்த்து பயப்பட தேவையில்லை. நவீன மருத்துவம் நன்கு வளர்ந்துவிட்டது. எல்லா வகையான வலிப்பும் கட்டுப்படுத்த முடியும், சிலவற்றை நிரந்தரமாக குணப்படுத்தவும் முடியும். அவர்களும் பிறர் போல இயல்பாக வாழ முடியும்.
- இன்று(நவ. 17) தேசிய வலிப்பு தினம்.

