ADDED : செப் 09, 2025 06:32 AM

சென்னை: 'சமூக வலைதளங்களில் வரும் போலி லிங்குகள், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., வாயிலாக வரும் லிங்குகள் போன்றவற்றை, 'கிளிக்' செய்ய வேண்டாம்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுதும், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு, உரிமம் புதுப்பித்தல் என, பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த சேவைகளை பெற, parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான, 'டெஸ்ட்' தவிர, பெரும்பாலான சேவைகளை, இணையதளம் வாயிலாகவே பெறலாம். இதற்கான கட்டணத்தையும், இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
ஆனால், சமீபகாலமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, வாகனப்பதிவு போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தலாம் எனக்கூறி, வாடிக்கையாளர்களுக்கு, 'வாட்ஸாப்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, ஓரிரு எழுத்துக் கள் மாற்றப்பட்ட லிங்க்குகளை அனுப்பி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு போன்ற சேவைகளை பெற, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான 'parivahan.gov.in' என்ற இணையதளம் மற்றும், 'mParivahan' என்ற செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மோசடியில் ஈடுபட சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பும் லிங்குகள், எஸ்.எம்.எஸ்., லிங்குகளை, யாரும், 'கிளிக்' செய்ய வேண்டாம், வேறு செயலியையும் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.