அமைச்சர் அமித் ஷா பேசுவதாக ஏமாற்றி உறவினரிடம் ரூ.4 கோடி சுருட்டிய கும்பல்
அமைச்சர் அமித் ஷா பேசுவதாக ஏமாற்றி உறவினரிடம் ரூ.4 கோடி சுருட்டிய கும்பல்
ADDED : செப் 24, 2025 02:55 AM

புனே: மஹாராஷ்டிராவில், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம், மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது போல் ஏமாற்றிய உறவினர், அவரிடம் இருந்து ஐந்து ஆண்டுகளில் 4 கோடி ரூபாயை சுருட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சூர்யகாந்த் தோரட். கடந்த 2019ல் இவரை உறவினர் ஷுபாம் பிரபாலே என்பவர் தொடர்பு கொண்டார்.
அவரிடம், 'என் மகன் மத்திய அரசின் உளவு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ரகசிய பணி ஒன்றுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு கீழ் நேரடியாக பணிபுரிகிறார். 'மகனுக்கு அரசு 38 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது' என கூறி உள்ளனர்.
அதை பெறுவதற்கு செயல்பாட்டு கட்டணம், வழக்கறிஞர் கட்டணம், உயரதிகாரிகளுக்கு பரிசு பொருட்கள் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக 2020 முதல் 2024 வரை சூர்யகாந்திடம் இருந்து 4 கோடி ரூபாய் வரை வாங்கி உள்ளார். 38 கோடி ரூபாய் வந்த உடன் வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
சூர்யகாந்தின் நம்பிக்கையை பெறுவதற்காக, 'மொபைல் போன்' குழு அழைப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் குரல்களை மிமிக்ரி செய்து ஏமாற்றி உள்ளனர். மேலும், போலி அடையாள அட்டை, கைதுப்பாக்கி ஆகியவற்றை காட்டியுள்ளனர்.
இதை நம்பி 4 கோடி ரூபாய் வரை தந்துள்ளார் சூர்யகாந்த். பணத்தை திருப்பி கேட்ட போது பல மாதங்களாக மகன் வெளிநாட்டில் உளவு பணியில் இருப்பதாக கூறி தட்டி கழித்து உள்ளனர்.
இது தொடர் கதையாக சென்றதால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சூர்யகாந்த் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் ஷுபாம் பிரபாலே மற்றும் நான்கு பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.