ஜெம் வீரமணி பாலியல் வழக்கு; சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய, விடிய விசாரணை
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு; சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய, விடிய விசாரணை
ADDED : செப் 25, 2026 08:22 AM

சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கஸ்டடி எடுக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் விடிய, விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்த, 'ஜெம்' கிரானைட்ஸ் நிறுவனத்தின்உரிமையாளர் வீரமணி, 85, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய தோழி சாந்தி, 61. இவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63, உதவியாளர் கணேசன், 55 ஆகியோர், அதே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக, வீரமணியின் ரகசிய டைரி மற்றும் அவர் சிறுமியரை பாலியல் வன்முறை செய்த 'வீடியோ'க்கள் சிக்கி உள்ளன. இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 3 நாள் கஸ்டடி எடுக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் விடிய, விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
வீரமணி எத்தனை ஆண்டுகளாக சிறுமிகளிடம் அத்துமீறினார்; வீரமணியின் வீடியோவை வைத்து யார் யாரிடம் பணம் பறிக்கப்பட்டது என்பன உள்பட கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விடிய, விடிய விசாரணை நடந்துள்ளது. சிறுமிகளிடம் வீரமணி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இடத்திற்கே அழைத்து சென்று சாந்தியை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
