மோடியுடன் ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் சந்திப்பு: 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மோடியுடன் ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் சந்திப்பு: 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
ADDED : ஜன 13, 2026 01:00 AM

ஆமதாபாத்: குஜராத்தில், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்சை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்பு வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, ராணுவம், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே, 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், இரு நாட்கள் அரசு முறைப் பயணமாக நம் நாட்டின் குஜராத்துக்கு வந்துள்ளார்.
ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். இது அவரது முதல் இந்திய பயணம். காந்தி நகரில், பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் வி வாதித்தனர். தொடர்ந்து, கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம், ரா ணுவம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே, 19 புரிந்துணர்வு ஒ ப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சந்திப்புக்கு பின், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
விரிவான ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் மூலம் இந்தியா - ஜெர்மனி இடையிலான நட்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. உயர் கல்வி குறித்த விரிவான செயல் திட்டம், கல்வித் துறையில், இரு தரப்பு கூட்டணியில் ஒரு புதிய திசையை வழங்கும்.
ஜெர்மனியில் உள்ள பல்கலைகள், தங்களது வளாகங்களை இந்தியாவிலும் திறக்க வேண்டும். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல் என்பதை இந்தியா - ஜெர்மனி ஒப்புக்கொண்டன. இதற்கு எதிராக இரு நாடுகளும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடும்.
ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா மோதல் உட்பட உலகளாவிய பிரச்னைகள் குறித்து, ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் உடன் விவாதித்தேன். அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இதுவே எங்களது நிலைப்பாடு. இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஆமதாபாதில் உள்ள சபர்மதி காந்தி ஆசிரமத்துக்கு ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இரு தலைவர்களும் மஹாத்மா காந்தியின் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின், சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியும், அவரது மனைவி கஸ்துாரிபாவும் வசித்த, 'ஹிருதய கஞ்ச்' இல்லத்தை பார்வையிட்டனர். மேலும், 'ராட்டை'யில் கதர் நுால் நுாற்கப்படும் செயல்முறையை பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆர்வத்துடன் பார்த்தார்.
பார்வையாளர் புத்தகத்தில், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் எழுதிய குறிப்பு:
ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தின் மீதான காந்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படும் இன்றைய உலகில், இந்த மரபு இந்தியர்களையும், ஜெர்மானியர்களையும் நண்பர்களாக இணைக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

