'கோல்ட்ரிப்' மருந்து நிறுவன உரிமம் ரத்தாகிறது: சட்ட நடவடிக்கைக்கும் மருந்து கட்டுப்பாட்டு துறை பரிந்துரை
'கோல்ட்ரிப்' மருந்து நிறுவன உரிமம் ரத்தாகிறது: சட்ட நடவடிக்கைக்கும் மருந்து கட்டுப்பாட்டு துறை பரிந்துரை
ADDED : அக் 09, 2025 12:32 AM

சென்னை: 'மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான, 'கோல்ட்ரிப்' மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமம், வரும் 13ம் தேதி ரத்து செய்யப்பட உள்ளது. அந்நிறுவனத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், 'ஸ்ரீசென் பார்மா' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
உத்தரவு குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் 'டை எத்திலீன் கிளைசால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுதும் அம்மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட பாட்டில்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அம்மருந்துகளை, மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவகாசம் இதுகுறித்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
'ஸ்ரீசென் பார்மா' நிறுவனத்தின் மீதான புகார் பெறப்பட்டவுடன், சோதனை நடத்தப்பட்டு, 3ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, உரிய பதில் அளிக்க, 12ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, 13ம் தேதி அந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்புக்கான உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.