பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் 'கட்'
பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் 'கட்'
ADDED : அக் 19, 2025 06:43 AM

ஹைதராபாத்: பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு சட்டம் கொண்டு வர உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, அரசு பணிக்கு, 'குருப் - 2' மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாதில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பணி நியமன ஆணையை வழங்கினார். புதிய அதிகாரிகளிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
பிரச்னைகளுடன் வரும் பொதுமக்களிடம் அரசு ஊழியர்களான நீங்கள் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால், அவர்களது சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட தொகையை, ஊழியர்களின் பெற்றோர் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் சம்பளம் பெறுவது போல் உங்கள் பெற்றோரும் மாத சம்பளம் பெறுவது, இதன் மூலம் உறுதி செய்யப்படும். இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான புதிய மசோதாவை உருவாக்குவதற்கான குழுவை அமைக்க, தலைமை செயலர் ராமகிருஷ்ண ராவை கேட்டு க்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.