சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: டிச.,10 வரை இடைக்கால தடை நீட்டிப்பு
சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: டிச.,10 வரை இடைக்கால தடை நீட்டிப்பு
ADDED : நவ 18, 2025 02:17 PM

மதுரை: மதுரை: சாலை களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை விதித்து இருந்த இடைக்கால தடை டிசம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இந்த அரசாணைக்கு எதிராக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், ''குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடை க்கால தடை விதித்தும், முதற்கட்ட அறிவியல் பூர்வமான கள ஆய்வு பணியை மேற்கொள்ளலாம். அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக்கூடாது'' எனவும் ஐகோர்ட் மதுரைக்கிளை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு, இன்று (நவ.,18) மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. பின்னர், நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இடைக்காலத் தடையை நீட்டித்து, டிசம்பர் 10ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

