இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
ADDED : அக் 04, 2025 04:28 PM

வாஷிங்டன்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டு, இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க சம்மதித்துள்ளது. இந்த முடிவுக்கு உலக நாடுகள், ஐநா வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது: இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நிரந்தர போர் நிறுத்தம் உடனடியாக கொண்டு வர வேண்டும். அனைத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது. அமெரிக்காவுடன் இணைந்து மத்தியஸ்தம் பணி மேற்கொண்ட கத்தார், எகிப்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐ.நா ஆதரிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகள் வரவேற்பு
அதேபோல், கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. 'இது அமைதியை கொண்டுவர முக்கியமான ஒன்றாகும். பிணைக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம்' என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், 'இது ஒரு முக்கியமான முன்னேற்றம். மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும்' என்றார்.