ADDED : மே 02, 2026 05:47 AM

சென்னை: 'தமிழகத்தில் சில இடங்களில், அடுத்த ஆறு நாட்களுக்கு, இடி, மின்னலுடன் லேசான மழையும்; இன்று எட்டு மாவட்டங்களில், கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை 8:30 மணிக்கு, முந்தைய 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
வளிமண்டலத்தில், தெற்கு ஒடிஷா முதல் மன்னார் வளைகுடா வரையிலும், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் வழியாக, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மே 7ம் தேதி வரை, இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சில இடங்களில், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர் மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
