ADDED : மே 20, 2026 02:30 PM

சென்னை: சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மே 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் (மே 20), நாளையும் (மே 21) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மே 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று (மே 20) முதல் மே 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
