கோவில்களை பாதுகாக்க தனி வாரியம்; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
கோவில்களை பாதுகாக்க தனி வாரியம்; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜூன் 21, 2026 10:42 PM

திருநெல்வேலி: 'பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு தடை விதிக்கக் கூடாது' என ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம், அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், திருநெல்வேலியில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், தென் பாரத அமைப்பாளர் பக்தன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சமுதாய, ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் விற்பனையை கடுமையாக ஒடுக்க வேண்டும்; திருச்செந்துார் கோவிலில் பக்தர்களின் சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்;
தமிழக கோவில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்; பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு தடை விதிக்கக் கூடாது; தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
