வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு; 'உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது' என மிரட்டல்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு; 'உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது' என மிரட்டல்
UPDATED : டிச 24, 2025 01:33 AM
ADDED : டிச 24, 2025 01:23 AM

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளை, கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் இரவு தீ வைத்து எரித்தனர். வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. 'முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஹிந்துக்கள் நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; உங்கள் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் எஞ்சாது. உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது' என, பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அடுத்தாண்டு பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர்இழந்தார். இதையடுத்து, அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.
தேர்தல் நடக்கும்
மேலும், ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய உடலை, மரத்தில் கட்டி வைத்து தீயிட்டு எரித்தனர். அங்குள்ள பத்திரிகை அலுவலகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், மாணவர் அமைப்பின் மற்றொரு தலைவர், முகமது மொதாலெப் சிக்தார் மீது நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தலையில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் சிறப்பு துாதர் செர்ஜியோ கோர், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து நேற்று பேசினார். இருவரும், 30 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சின்போது, நாட்டின் ஜனநாயக மாற்றத்தை தடுக்கும் நோக்கில் முந்தைய ஆட்சியாளரின் ஆதரவாளர்கள் வன்முறையை துாண்டி வருவதாக யூனுஸ் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஹாதி படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று தரப்படும் என்று தெரிவித்த யூனுஸ், வன்முறை, பதற்றமான சூழல் நிலவும் போதிலும், அறிவிக்கப்பட்ட தேதியில் வங்கதேசத்தில் கட்டாயம் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
இதற்கிடையே, வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் ஹிந்துக்களான ஜெயந்தி சங்கா மற்றும் பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தீ வைத்து கொளுத்தினர்.
கடைசி எச்சரிக்கை
நள்ளிரவு நேரத்தில் வைக்கப்பட்ட தீயில், வீடுகள் மளமளவென எரிவதைக் கண்ட அவர்களது குடும்பத்தினர், வேலியை பிரித்துக் கொண்டு கடைசி நேரத்தில் உயிர் தப்பினர். இருப்பினும், இவர்கள் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும், வளர்த்து வந்த செல்ல பிராணிகளும் தீக்கிரையாகின.
இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகே, ஹிந்துக்களை மிரட்டும் வகையிலான ஒரு பதாகை கண்டெடுக்கப்பட்டது. வங்க மொழியில் எழுதப்பட்ட அந்த பதாகையில், 'இங்குள்ள ஹிந்துக்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறீர்கள்; இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயல்களில் நீங்கள் ஈடுபடுவதாக குற்றஞ் சாட்டப்படுகிறீர்கள்.
'உங்களின் நடமாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் எஞ்சாது. உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இதுவே, உங்களுக்கு விடுக்கப்படும் கடைசி எச்சரிக்கை' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

