துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் விபத்து; சாகச நிகழ்ச்சியில் சோகம்
துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் விபத்து; சாகச நிகழ்ச்சியில் சோகம்
UPDATED : நவ 21, 2025 04:53 PM
ADDED : நவ 21, 2025 04:49 PM

துபாய்; துபாய் விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் பறந்து கொண்டு இருந்தது.
விமானம் வானில் பறந்து கொண்டிருப்பதை கண்காட்சியை காண கூடியிருந்த பலரும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம், வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இந்த காட்சிகள் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரின் செல்போன்களில் பதிவானது.
விமானம் வெடித்துச் சிதறிய போது அங்கு பெரும் புகை மண்டலம் எழுந்தது.போர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இது குறித்து எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எப் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். விமானி உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு தமது பதிவில் கூறியுள்ளது.

