உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு; ஐரோப்பிய கவுன்சில் எதிர்பார்ப்பு
உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு; ஐரோப்பிய கவுன்சில் எதிர்பார்ப்பு
ADDED : செப் 05, 2025 11:40 AM

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா ஆகியோர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினர்.
அப்போது, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரவேற்பதாக பிரதமரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினோம். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மிகவும் வரவேற்கிறோம்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், அமைதிக்கான பாதையை உருவாக்குவதிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் போர் உலக பாதுகாப்பை கெடுப்பதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கிறது. எனவே இது முழு உலகிற்கும் ஒரு அச்சுறுத்தலாகும்.
2026ம் ஆண்டின் தொடக்கத்தில், அடுத்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உச்சி மாநாட்டில் ஒரு கூட்டு மூலோபாய நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த ஆண்டின் முடிவுக்குள் தடையில்லா வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடிக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ' இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக நிறைவு செய்வது குறித்தும், ஐஎம்இஇசி கால்வாயை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் நமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.
அதேபோல, ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.