ADDED : செப் 05, 2025 02:37 AM

பீஜிங்:“பாகிஸ்தானின் பிராந்திய நிலைப்பாடு, இறையாண்மை மற்றும் சமூக- பொருளாதார வளர்ச்சிக்கு சீன அதிபரும், அந்நாட்டு மக்களும் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி,” என, சீன பிரதமருடனான சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆறு நாள் பயணமாக கடந்த ஆகஸ்ட் 30ல் சீனாவுக்கு சென்றார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரில் வென்றதன் 80ம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டத்திலும் பங்கேற்றார்.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் உட்பட பல நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக, சீனப் பிரதமர் லி குயாங்கை பீஜிங்கில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தரப்பினரும் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தை செயல்படுத்துவதில் நெருக்கமாக பணியாற்ற உறுதி ஏற்றனர்.
இந்த சந்திப்பின்போது, ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:
பாகிஸ்தானின் பிராந்திய நிலைப்பாடு, இறையாண்மை மற்றும் சமூக -பொருளாதார வளர்ச்சிக்கு சீன அதிபரும், அந்நாட்டு மக்களும் வழங்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.
சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாடு அசாத்திய மாற்றத்தை கண்டு வருகிறது.
சீனா- - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், அதிபர் ஜின்பிங்கின் முக்கிய திட்டம். இது கடந்த பத்தாண்டில் பாகிஸ்தானின் சமூக- பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது விவசாயம், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.