வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 121 ரன் இலக்கு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 121 ரன் இலக்கு
ADDED : அக் 13, 2025 03:56 PM

புதுடில்லி: டில்லி டெஸ்டில் 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 121 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 270 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு 'பாலோ-ஆன்' கொடுத்தது.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் அணி இரண்டாவது இன்னிங்சில் 173/2 ரன் எடுத்து, 97 ரன் பின்தங்கியிருந்தது.
4வது நாளான இன்று, கேம்பல் 115 ரன்களில் அவுட்டானார். ஷாய் ஹோப் 103, ரோஸ்டன் சேஸ் 40, ஜேடென் சீல்ஸ் 32 ரன் எடுத்து அந்த அணி முன்னிலை பெற உதவினர். ஜஸ்டின் கிரீவ்ஸ் 50 ரன்னுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அந்த அணி 390 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா தலா 3, முகமது சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.