sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா

/

மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா

மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா

மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா

1


ADDED : அக் 01, 2025 07:34 AM

Google News

1

ADDED : அக் 01, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவின் ஐயோவா மாகாண கவர்னர், கிம் ரெய்னல்ட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். வெளிநாட்டு பிரமுகரின் இந்திய வருகை என பார்த்தால், இது சாதாரண வர்த்தக குழு வருகையோ, துாதரக நடைமுறை போலவோ தோன்றலாம்.

ஆனால், உண்மையில் இது அமெரிக்காவின் வியூக நடவடிக்கை. ஐயோவா, அமெரிக்காவின் மிகப்பெரிய மக்காச்சோள உற்பத்தி மாகாணம் என்பது தான் காரணம். மெக்சிகோவை விட அது மூன்று மடங்கு அதிக சோளத்தை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்கா, நீண்ட காலமாக இந்தியாவை தன் அதிகப்படியான மக்காச்சோளத்திற்கான முக்கிய சந்தை என கண்டு வருகிறது. எனவே, ரெய்னல்ட்ஸ் இந்தியா வந்தது வெறும் பயணம் மட்டுமல்ல; இந்திய சந்தையை திறக்க வைக்கும் முயற்சியுமாகும்.

அமெரிக்காவின் சோள கதை

மக்காச்சோளம் அமெரிக்காவின் ஒரே பெரிய வேளாண் உற்பத்தி பொருளாகும். ஐயோவா, இல்லினாய்ஸ், நெப்ராஸ்கா, மின்னசோட்டா உள்ளிட்ட மத்திய மேற்கு மாகாணங்களில் பரவலாக இது சாகுபடி செய்யப்படுகிறது. 2024 - 25ல், அமெரிக்கா 37.76 கோடி டன் சோளம் உற்பத்தி செய்து, 7.17 கோடி டன் ஏற்றுமதி செய்தது.

ஆனால், ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததால், அந்த மாகாணங்களின் அரசியல் பொருளாதார சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விற்பனை மீது அதிகமாக சார்ந்துள்ள மாகாணங்களே இந்த அழுத்தத்தை உருவாக்குகின்றன.

அமெரிக்கா, நீண்ட காலமாக இந்தியாவை தன் அதிகப்படியான மக்காச்சோளத்திற்கான முக்கிய சந்தையாக பார்த்து வருகிறது.



இந்தியா ஏன் வாங்குவதில்லை?

இந்தியாவின் குறைந்த அளவிலான சோள இறக்குமதிக்கு இரண்டு காரணங்கள்.

சுங்க கொள்கை: ஆண்டுக்கு 5 லட்சம் டன் சோளம் மட்டுமே 15 சதவீத வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேலான இறக்குமதிக்கு, 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது, உள்நாட்டு விவசாயிகளை காக்கும் நடவடிக்கை.

மரபணு மாற்றப்பட்டதற்கு தடை: இந்தியா நீண்ட காலமாக மரபணு மாற்றப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பதில்லை. பொது சுகாதாரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் இதற்கு காரணம். இந்தியாவின் கோழிகள், கால்நடைகளுக்கு உகந்த சோளம் அமெரிக்காவில் இருந்தாலும், இறக்குமதி செய்வது மிக குறைவு.

கொள்கையின் நோக்கம்

விவசாயிகளின் வருமானம் காக்கப்படுகிறது. கிராமப்புற வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

உணவு தன்னாட்சி நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால், இந்திய சந்தையை நோக்கி காத்திருக்கும் அமெரிக்கா, இதை கடுமையாக விமர்சிக்கிறது.

'140 கோடி மக்கள் இருக்கிறோம் என்று இந்தியா பெருமைப்படுகிறது. அப்படி என்றால், ஏன் அந்த மக்கள் அமெரிக்க சோளத்தை வாங்குவதில்லை?' என்று அமெரிக்க வர்த்தக செயலர் ஹோவர்ட் லுட்னிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலை ஒப்பீடு


இந்திய மொத்த விலை:

கிலோ ரூ.22 - 23 (2025 - 26).

குறைந்தபட்ச ஆதரவு விலை:


ரூ.24 / கிலோ.

அமெரிக்கா (ஜூலை 2025):

ரூ.15 / கிலோ.

இந்திய உற்பத்தியை விட, அமெரிக்க சோளம் மலிவானதாக இருந்தாலும், தன் மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் தன்னிறைவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.

அரசியல் பரிமாணம்

பீஹார், இந்தியாவின் மூன்றாவது பெரிய சோள உற்பத்தி மாநிலம். விரைவில் இது சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகிறது. இந்த சூழலில் மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க சோளத்தை அனுமதிப்பதோ, அல்லது இறக்குமதி வரியை குறைப்பதோ, ஆளுங்கட்சியின் அரசியலுக்கு அபாயமானது.

எதிர்க்கட்சிகள் இதை, 'வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்காக உள்ளூர் விவசாயிகளை தியாகம் செய்கின்றனர்' என்று பிரசாரம் செய்யும் வாய்ப்பு உண்டு. எனவே, பிரதமர் மோடி, அமெரிக்க கோரிக்கைகளுக்கு எதிராக இருப்பதை, விவசாயிகள் நலனுக்கான போராட்டமாக விளக்குகிறார்.

அமெரிக்காவின் அவசரம்

அமெரிக்காவுக்கு இந்தியா அடுத்த பெரிய சந்தை. இந்தியாவில் தனி நபர் வருமானம் தொடர்ந்து உயர்கிறது. சீன சந்தையை இழந்ததால், அமெரிக்காவுக்கு இந்தியா கண்ணில் நிழலாடுகிறது.

அதன் ஒரு முயற்சி தான், ஐயோவா கவர்னர் ரெய்னல்ட்ஸ் இந்திய பயணம். ஆனால், இந்தியா தன் உணவு தன்னாட்சியும் விவசாயிகள் நலனும் காக்கும் வகையில் உறுதியுடன் நிற்கிறது.

அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும், இந்தியாவின் இந்த இறுக்கமான பிடியால், மக்காச்சோள சந்தை திறப்பு உடனடியாக சாத்தியமாகும் சூழல் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us