இந்திய நுகர்வோரின் நலனே முக்கியம்: டிரம்ப்புக்கு மத்திய வெளியுறவுத்துறை பதில்
இந்திய நுகர்வோரின் நலனே முக்கியம்: டிரம்ப்புக்கு மத்திய வெளியுறவுத்துறை பதில்
ADDED : அக் 16, 2025 03:45 PM

புதுடில்லி: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்திய நலன்களை பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என டிரம்ப் கூறிவந்தார். இதனை இந்தியா ஏற்காத காரணத்தினால், அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்துள்ளார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிரம்ப் நிருபர்களிடம் '' பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. அவர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என எனக்கு உறுதி அளித்தார். இருப்பினும் இந்தியாவால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறினார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் முடிவடையும்'', எனத் தெரிவித்து இருந்தார். இதை வைத்து காங்கிரஸ் எம்பி ராகுல், மத்திய அரசை விமர்சனம் செய்து இருந்தார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த நோக்கத்தால், இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன. நிலையான விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வதே எங்கள் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகள் ஆகும்.
இதில் இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்கள் , சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமான வகையில் பன்முகப்படுத்துவதும் அடங்கும். அமெரிக்காவை பொறுத்தவரை நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயற்சி செய்கிறோம். இது கடந்த 10 ஆண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.