ஆமதாபாத்தில் அசத்திய இந்தியா; டி-20 தொடரை வென்றது ஜோரா..!
ஆமதாபாத்தில் அசத்திய இந்தியா; டி-20 தொடரை வென்றது ஜோரா..!
ADDED : டிச 19, 2025 11:37 PM

ஆமதாபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி 'டி 20' கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-1 என வென்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த நான்காவது போட்டி மோசமான வானிலை (பனிப்பொழிவு) காரணமாக ரத்தானது. ஐந்தாவது, கடைசி போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் (டிச. 19) நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டார். பும்ரா அணியில் சேர்க்கப்பட்டார்.
அதிரடி துவக்கம்:
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிசேக் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் 37 ரன் எடுத்து லிண்டே பந்தில் போல்டானார். அபிஷேக் சர்மா 21 பந்தில் 34 ரன் எடுத்து போஸ்ச் பந்தில், டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் (5) ஏமாற்றினார்.
திலக் பாண்ட்யா அதிரடி :
பின்னர் இணைந்த, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி, அதிரடியாக ரன்களை குவித்தனர். திலக் வர்மா 73 ரன் எடுத்தபோது ரன் அவுட்டானார். பாண்ட்யா 25 பந்தில் 63 ரன் எடுத்து பார்ட்மன் பந்தில் அவுட்டானார்.இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன் குவித்தது. சிவம் துபே 10 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
சரவெடி துவக்கம்:
கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர், ஹென்றிக்ஸ் 11 ரன்னில் அவுட்டானார். பின்னர் டி காக் உடன் இணைந்த டிவால்ட் பிராவிஸ், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் முதல் 10 ஓவரில், 118 - 1 என்ற வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தது.
சக்ரவர்த்தி சுழல் ஜாலம் :
பின்னர் இந்திய பவுலர்கள் அசத்த துவங்கினர். அரை சதம் விளாசிய டி காக் (63) பும்ராவிடமும், பிராவிஸ்(31) ஹர்திக் பாண்டியா பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப 20 ஓவரின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி, 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை மட்டும் எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட், பும்ரா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யாவும், தொடர் நாயகன் விருதை வருண் சக்ரவர்த்தியும் வென்றனர்.

