கல்வி நிறுவனங்கள் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறக் கூடாது; எச்சரிக்கிறார் ஓவைசி
கல்வி நிறுவனங்கள் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறக் கூடாது; எச்சரிக்கிறார் ஓவைசி
ADDED : நவ 24, 2025 02:25 PM

ஹைதராபாத்: கல்வி நிறுவனங்கள் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறக் கூடாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 அப்பாவி பொதுமக்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அரங்கேற்றிய உமர் நபி, ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்துள்ளான்.
இந்தப் பல்கலையில் பணியாற்றி வந்த மேலும் சில டாக்டர்களுக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கல்வி நிறுவனங்கள் பயங்கரவாதத்தின் கூடாரமாக மாறுவதை ஏற்க முடியாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது; கல்வி நிறுவனங்களில் அமர்ந்து வெடிகுண்டு தயாரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. டில்லி வெடிகுண்டு தாக்குதலில் ஹிந்து, முஸ்லிம் என 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நாம் கண்டிக்க வேண்டும். நம் நாட்டின் எதிரிகள், நமக்கு எதிரிகள் தான்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டில் முஸ்லிகள் 2ம் நிலை மக்களாக நடத்துவது போல அவர்கள் நினைத்துக் கொண்டு இதுபோன்று செய்கின்றனர். ஆனால், அப்படி ஒருபோதும் நடத்தப்படுவதில்லை. ஹிந்து மற்றும் முஸ்லிம் சமூக மக்கள் நம் நாட்டில் மரியாதை மிக்க குடிமக்களாக தான் வாழ்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

