கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை
ADDED : டிச 26, 2025 08:22 AM

டோரன்டோ: கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி ஹிமான்ஷி குரானா என்பவர் அவரது ஆண் நண்பரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டொரன்டோ ஸ்கார்போரா பல்கலை வளாகம் அருகே 20 வயதான இந்திய மருத்துவ மாணவர் ஷிவாங்க் அவஸ்தி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது இந்தியர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைலேன்ட் க்ரீக் டிரைல் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசாரணையை தொடங்கினர். இந்த ஆண்டில் மட்டும் டொரன்டோவில் நிகழ்ந்த 41வது கொலை சம்பவமாகும்.
இந்நிலையில், இந்திய மருத்துவ மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

