பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தது இந்தியா; இஸ்ரேல் பிரதமர் நன்றி
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தது இந்தியா; இஸ்ரேல் பிரதமர் நன்றி
ADDED : செப் 09, 2025 07:18 AM

ஜெருசலேம்: ஜெருசலேமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில், ஜெருசலேமில் பஸ்சில் ஏறிய பின்னர் பயங்கரவாதிகள் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.