அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் போரில் வெற்றி: டிரம்ப் பேச்சு
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் போரில் வெற்றி: டிரம்ப் பேச்சு
ADDED : அக் 13, 2025 06:17 PM

டெல் அவிவ்: '' அமெரிக்காவின் உதவியுடன் அனைத்து போர்களிலும் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது,'' என இஸ்ரேல் பார்லிமென்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.
காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இதனையடுத்து முதற்கட்டமாக இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாராட்டும் வகையில், இஸ்ரேல் பார்லிமென்டில் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது: அடுத்தாண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப்பை விட வேறு சிறந்த நபர் வேறு யாரும் கிடையாது. டிரம்ப், இஸ்ரேலின் மிகச்சிறந்த நண்பர். முழு உலகத்தின் ஆதரவைப் பெற்ற இந்த திட்டத்திற்கு உங்கள் முக்கிய தலைமைக்கு நன்றி தெரிவிக்க உங்களை இங்கு வரவேற்கிறோம். எங்களின் பிணைக்கைதிகளை வீட்டுக்கு கொண்டு வரும் திட்டம், நமது நோக்கங்களையும் பூர்த்தி செய்வதுடன் போரையும் முடிவுக்கு கொண்டு வரும். நான் நிறைய அமெரிக்க அதிபர்களை பார்த்துள்ளேன். ஆனால், நமது நண்பர் டிரம்ப்பை போல் உலகை விரைவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் முன்னெடுத்து சென்றவரை பார்த்தது இல்லை. இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுடனான உறவை டிரம்ப்பால் மேம்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதை டிரம்ப்புக்கு வழங்க பரிந்துரை செய்வதாகவும் நெதன்யாகு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் பேசியதாவது: இரண்டு ஆண்டுகள் இருளில் தவித்த பிறகு 20 தைரியமிக்க பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைய உள்ளனர். 28 பேரின் உடல்கள் சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட உள்ளனர். துப்பாக்கிகள் மவுனமாகி உள்ளன. இந்த பகுதியில் அமைதி ஏற்படுவதுடன் அது நீண்ட நாட்கள் நீடிக்கும்.
மத்திய கிழக்கில் இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அசாதாரண துணிச்சல் கொண்டவராக உள்ளார். இந்த முடிவு ஏற்படுவதற்கு உதவி செய்த அரபு நாடுகள் பாராட்டுக்குரியவை. இனி வரும் நாட்கள் இஸ்ரேலின் பொற்காலமாக இருக்கும். இந்த பகுதிக்கும் பொற்காலமாக இருக்கும்.
8 மாதத்தில் 8 போரை நிறுத்தி உள்ளேன். அதில் இதுவும் ஒன்று. ஈரானின் அணு ஆயுத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தாமல் இந்த ஒப்பந்தம் சாத்தியம் ஆகியிருக்காது. எங்கள் உதவியுடன் இஸ்ரேல் அனைத்து போர்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்திய கிழக்கில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படுவதற்கு இதுவே சரியான நேரம். இவ்வறு அவர் பேசினார்