உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே
உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே
ADDED : நவ 09, 2025 04:33 AM

வாஷிங்டன்: அமெரிக்க விசாவுக்கு வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும் போது, விரிவான உடல் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, அமெரிக்க வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, விசா பெறுவது மேலும் கடினமாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல், குடியேற்ற நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 'எச்1பி' விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தினார்.
அடுத்ததாக தற்போது, அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு, விரிவான உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு துறை தன் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய சுற்றறிக்கையில், 'விசா கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மதிப்பிடும் போது, விண்ணப்பதாரரை மிகவும் விரிவான உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதயம், சுவாசம், புற்று நோய், நீரிழிவு, வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழிக்கக் கூடியவர்களா என்பதை, விசா அதிகாரிகள் மதிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் அரசின் உதவியை நாடமாட்டார் அல்லது அரசு செலவில் நீண்ட கால மருத்துவ பராமரிப்புக்கு செல்லமாட்டார் என்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த புதிய நடைமுறையின்படி, உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

