'பார்த்ததெல்லாம் போதும்யா... போன்லயே பேசி முடிங்கய்யா!'
'பார்த்ததெல்லாம் போதும்யா... போன்லயே பேசி முடிங்கய்யா!'
ADDED : செப் 09, 2025 05:07 AM

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப் பங்களை, மொபைல் போன் வாயிலாகவே சரிபார்த்து அனுப்ப, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 1.20 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்ட இத்திட்டம், வரும் 15ம் தேதியுடன், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை பெறுவதற்கு, மாநிலம் முழுதும் உள்ள மகளிர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், இதற்கென தனி, 'கவுன்டர்'கள் அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி, இதுவரை, 12 லட்சம் மனுக்கள் வரை பெறப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல், 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளதால், விண்ணப்பிக்கும் மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட மனுக்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரிபார்ப்பு பணிக்கு வழங்கப்பட்டு உள்ளன.
மனுக்களை சரிபார்த்து விரைந்து வழங்கும்படி, வருவாய் துறை செயலர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், பல கிராமங்களில் மனுக்கள் சரிபார்ப்பு பணிகள் இன்னும் முடியவில்லை.
உரிமைத்தொகை திட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. அதற்குள், புதிய பயனாளிகள் குறித்த அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே, காலம் தாழ்த்தாமல், மொபைல் போன் வாயிலாக, பயனாளிகளை தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மொபைல் போன் வாயிலாக விண்ணப்பங்களை சரிபார்த்து அனுப்பும் பணிகளில், கிராம நிர்வாக அலுவலர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.