டில்லியில் போலீசாரை தாக்கிய ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் கைது
டில்லியில் போலீசாரை தாக்கிய ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் கைது
UPDATED : அக் 18, 2025 10:37 PM
ADDED : அக் 18, 2025 10:32 PM

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்துவதை தடுக்க முயற்சித்த போலீசாரை ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் தாக்கினர். இதையடுத்து மாணவர் சங்கத் தலைவர் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்சன் மண்டேலா சாலையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை, போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி பேரணி செல்ல மாணவர்கள் முயன்றனர். இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் சிலர் போலீசாரை சரமாரியாக தாக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில், 6 போலீசார் காயமடைந்தனர்.
பின்னர், மாணவர் சங்கத் தலைவர் நிதேஷ் குமார், துணை தலைவர் மணிஷா உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் செயலைக் கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த மாதம் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலை வளாகத்தில் வலதுசாரி ஆதரவு ஏபிவிபி சங்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், இடதுசாரி சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் தசரா பண்டிகை முதல் மோதல் நீடித்து வருகிறது.
இதில் போலீசார் ஏபிவிபி மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு பெற்ற மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த அவர்களை போலீசார் தடுத்தபோதுதான் இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.