பண மூட்டை வழக்கில் நீதிபதி மனு; லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ்
பண மூட்டை வழக்கில் நீதிபதி மனு; லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ்
ADDED : டிச 17, 2025 12:41 AM

தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை ரத்து செய்யக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி, லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
விசாரணை குழு
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, டில்லியில் உள்ள அரசு பங்களாவில் வசித்த நிலையில், கடந்த மார்ச்சில், அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில் எரிந்த நிலையில், 500 ரூபாய் கட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். அவருக்கு வழக்குகள் எதுவும் ஒதுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் விசாரணை குழு விசாரித்ததில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. தொடர்ந்து, அவரை பதவி விலகும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார். அவர் முரண்டு பிடித்தார்.
கடந்த ஜூலை - ஆக., வரை நடந்த பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடரில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், எதிர்க்கட்சிகளின், 'இண்டி' மற்றும் ஆளும் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளித்தனர்.
இதை ஏற்ற சபாநாயகர் ஓம் பிர்லா, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
ஒத்தி வைப்பு
இந்த விசாரணைக் குழுவை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ராஜ்யசபா தலைவருடன் கலந்து ஆலோசிக்காமல், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இது அரசியலமைப்பு பிரிவு 124, 217 மற்றும் 218 ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே, விசாரணை குழுவை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், லோக்சபா சபாநாயகர் அலுவலகம், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலர்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜன., 7க்கு ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

