கர்நாடகா பிரச்னைக்கு சோனியா, ராகுலுடன் ஆலோசித்து முடிவு: கார்கே
கர்நாடகா பிரச்னைக்கு சோனியா, ராகுலுடன் ஆலோசித்து முடிவு: கார்கே
ADDED : நவ 26, 2025 03:16 PM

புதுடில்லி: '' கர்நாடகா அரசியல் பிரச்னைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராகுல் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. அண்மையில் டில்லி சென்ற சிவகுமார் ஆதரவாளர்கள், முதல்வர் மாற்றம் குறித்து கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பு ஆதரவாளர்களும் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: மாநில அரசு என்ன செய்கிறது என்பதை கர்நாடக மக்கள் தான் சொல்ல முடியும். அங்குள்ள பிரச்னைகளை சரி செய்வோம்.ராகுல், சோனியா, நானும் அமர்ந்து விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். தேவைப்பட்டால் தலையிட்டு தீர்வு காண்போம்.
பீஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாளை(நவ.,27) மறுஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம். நாளை அனைத்து தகவல்களையும் சேகரித்து, எங்கே, என்ன தவறுகள் நடந்தன என்பதைக் கண்டுபிடிப்போம். ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது என்பது உண்மைதான். எஸ்ஐஆரில் பல குறைபாடுகள் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் குறை உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்துகிறது. தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

